ஜகார்த்தா,நடப்பு ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட 2 சூறாவளி புயல்கள் ஆசிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி நீங்காத துயரை உண்டு பண்ணி விட்டன. இதன்படி, அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலானது, ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவை கடந்த வாரம் கடுமையாக பாதித்தது. புயல் மற்றும் பெருவெள்ளம் தொடர்ச்சியாக, வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
புயலால் கனமழை பெய்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 604 பேர் உயிரிழந்து உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு, தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அசே மாகாணத்தின் பிடீ ஜெயா பகுதியை சேர்ந்த அரினி அமலியா என்பவர் கூறும்போது, வெள்ள நீர் சுனாமி போன்று காணப்பட்டது. என்னுடைய பாட்டி, அவருடைய வாழ்நாளிலேயே மிக மோசம் வாய்ந்த சூழல் இது என கூறினார். அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அரினி கூறினார். இதுபோன்று பலரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாலங்கள் அடித்து செல்லப்பட்டும், சாலைகள் சேறும் சகதியும் சூழ்ந்தும் காணப்படுகின்றன. பலர் 3 நாட்களாக சாப்பிட உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். தூய குடிநீர், இணையதள வசதி, மின் இணைப்பு வசதியின்றி பலர் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலானது, இலங்கையை புரட்டி போட்டு விட்டது. புயலால் ஏற்பட்ட கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.
ஆசிய நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 1,230 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேசியாவில் 659 பேரும், இலங்கையில் 390 பேரும் மற்றும் தாய்லாந்தில் 181 பேரும் பலி என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மலேசியாவில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளின் மேல் பகுதியில் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
இதில், தாய்லாந்து நாட்டில் பெய்த கனமழையால் அந்நாட்டின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களை சேர்ந்த 39 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 15 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அவை ஒன்றன் மீது ஒன்றாக கிடப்பதுடன், நீரோட்டத்தில் அடித்தும் செல்லப்பட்டன.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 181 பேர் பலியாகி உள்ளனர். இவற்றில் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர் என அரசு செய்தி தொடர்பாளர் சிரிபோங் ஆங்காசகுலுகியாத் கூறியுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆசியாவில் புயல், வெள்ள பாதிப்புக்கு தாய்லாந்து, மலேசியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.




