உடலில் இரு புருவ மத்திமத்தில் இருக்கும் பகுதியை “ஆக்ஞா சக்கரம்” என்று சொல்லுவார்கள். முடிவில்லாத சக்திகளையும், மனோதிடத்தையும் அளிக்கக்கூடிய இந்த இடத்தில் திலகம் வைப்பது என்பது முக்கியமானது என்று இந்து மத சாஸ்திரம் கூறுகிறது.
இந்துமத சாஸ்திரத்தின் படி திருநீறு, திருமண், குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் என்று பலவகையான திலகங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ள சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவரின் இஷ்ட தெய்வத்திற்கும், குல வழக்க சாஸ்திரத்திற்கு ஏற்பவும் பிடித்தமான திலகங்களை வைத்துக் கொள்வார்கள். இது இறைவனை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்கள் என்பதை குறிக்கும் செயலாகும். அறிவியல் ரீதியாக ஆக்ஞா சக்கரத்தில் திலகம் வைத்துக் கொண்டால் உடலில் பல நாடிகள் தூண்டப்பட்டு மன அழுத்தம், மனசோர்வு ஆகியவை நீங்கி புது சக்தி பிறக்கும், மனம் ஒருமுகப்படும் .
விபூதி அல்லது திருநீறு தினமும் அணிபவர்கள் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆத்ம சக்தி அவர்களுக்கு நன்றாக இயங்கும். திருநீறு அணிவதால் ஐம்புலன்களும் தன் இஷ்டத்திற்கு ஆடாமல், சொல் பேச்சு கேட்கும். உடலில் நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். நல்லோர் நட்பும், தீயோரின் விலகலும் உண்டாகும். நல்ல சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும் இவர்களிடம் மேலோங்கி காணப்படும். குங்குமம் இட்டுக் கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். ஆண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் அழகும், நல்ல குணமும் உண்டாகும். புருவமத்திமம் சக்தி குவியும் இடமாக இருப்பதால் அந்த இடத்தில் தினமும் குங்குமம் வைத்துக் கொண்டால் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இறை சிந்தனையும், ஒழுக்கமும் கூடும். பிறரால் உங்களை வசியம் செய்ய முடியாது தடுக்கப்படும். நிர்வாக திறனும், ஆளுமை சக்தியும் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
செந்தூரம் தினமும் அணிபவர்கள் ஆஞ்சநேய பக்தர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு மனோதிடமும், உடல் வலிமையும் அதிகரிக்கும். குறைவாக பேசுவார்கள், மற்றவர்களின் பேச்சுகளை நிறைவாக கேட்பவர்களாக இருப்பார்கள். நெற்றியில் தினமும் செந்தூரம் இட்டுக் கொள்வதால், நீண்ட ஆயுள் உண்டாகும். மற்றவற்றை விட செந்தூரம் எவ்வளவு அழித்தாலும், அது தன் நிறத்தை கொஞ்சமாவது நெற்றியில் அப்படியே தக்க வைக்கும். ஆண், பெண் ஆகினும் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதால் தன் துணையைத் தவிர வேறு யாருடைய நினைப்பையும் மனதில் கொண்டுவராமல் மிகுந்த அன்பு பாராட்டுவார்கள்.
தினமும் நெற்றியில் சந்தனம் இட்டு கொள்பவர்கள் சாந்தமாக இருப்பார்கள். நன்கு சிந்தித்து சுயமாக நல்ல முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். சந்தனம் மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை புருவம் மத்திமத்தில் இட்டுக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடையும். மூளை சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி அடையும். நல்ல ஞாபக சக்தி அதிகரிக்கும். லட்சுமி கடாட்சமும், நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும். மனக்கலக்கம் ஏற்படும் பொழுது நெற்றியில் சந்தனம் அணிந்து கொண்டு சிந்தித்து பாருங்கள், தெளிவு கிடைக்கும்.
திருமண், திருநாமம் போன்றவற்றை நெற்றியில் தினமும் இட்டுக் கொள்வது வைணவர்களின் வழக்கம். திருமண் தினமும் இட்டுக் கொள்வதால் இறை சக்தி மேலோங்கி காணப்படும். திருமாலின் பாதமாக திருநாமம் சொல்லப்பட்டுள்ளது. திருமண் சரீரத்தை சுத்திகரிக்கும். உடலில் ஆற்றலை அதிகரிக்கும். மனசோர்வு அடையாமல் தடுக்கும். மகாலட்சுமியின் ஸ்ரூபமாகவும் திருமண் இருப்பதால் மனதில் இருக்கக்கூடிய அழுக்கான எண்ணங்களை அகற்றி, நல்ல சிந்தனைகளை பெருக்கும். மனோ பலம் அதிகரித்து தீய எண்ணங்கள் எழாமல் பாதுகாக்கும் அரணாக இருக்கும். இதனை காப்பு தரித்தல் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்கரத்தில் நீங்களும் தினமும் மறவாமல் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி பிடித்தமான திலகத்தை வைத்துக் கொள்ளுங்கள், நன்மைகளை பெறுங்கள்.
The post ஆக்ஞா சக்கரத்தில் திலகம் வைத்துக் கொண்டால்… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.