அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலின்படி, 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெறவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரையில் 23 இலட்சத்து 83 ஆயிரத்து 630 குடும்பங்கள் தமது தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இவர்களில் வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவுகளைச் சேர்ந்த 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளன.
தகுதி பெற்ற குடும்பங்களில் 3 இலட்சத்து 63 ஆயிரத்து 142 குடும்பங்கள் மிகவும் வறிய பிரிவில் உள்ளதுடன், அவர்களுக்கு மாதாந்தம் 17,500 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, வறிய பிரிவைச் சேர்ந்த 6 இலட்சத்து 28 ஆயிரத்து 658 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
பயனாளிகளின் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk இலும் வெளியிடப்பட்டுள்ளது. (a)

