
‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியைப் பெற்ற 16,800 பயனாளிகள் இதுவரை தமக்கான வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தமக்கு இக்கொடுப்பனவு கிடைத்துள்ளது என்பதைக் கூட அறியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,700 பேர் கணக்குகளைத் திறக்கவில்லை என்பதுடன், அதற்கு அடுத்தபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவானோர் கணக்குகளை ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறிய மற்றும் மிக வறிய பிரிவைச் சேர்ந்த இந்தப் பயனாளிகள், அரச வங்கி ஒன்றில் ‘அஸ்வெசும’ என்ற பெயரில் கணக்கைத் திறக்க வேண்டும். 2025 ஜூலை முதல் இந்த ஆண்டு பெப்ரவரி வரையிலான 8 மாத கால நிலுவைக் கொடுப்பனவுகள் ஏற்கனவே வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
தேசிய அடையாள அட்டை இல்லாதது வங்கி கணக்குகளை ஆரம்பிப்பதில் உள்ள முக்கிய தடையாகக் கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் வங்கி கணக்குகளை ஆரம்பித்து அறிவிப்பவர்களுக்கு, முந்தைய நிலுவைத் தொகைகளையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

