ஜப்பானின் பிரதான தீவுகளின் தென்மேற்கே மேலும் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான் அரசாங்கம், ஆனால், ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்ற ஆதாரமற்ற கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள பிரதான தீவான கியூஷுவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான மையப்பகுதிக்கு அருகிலுள்ள தொலைதூர தீவுகளிலிருந்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சில குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.
அந்த நிலநடுக்கம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியதுடன், கடந்த இரண்டு வாரங்களில் ககோஷிமா மாகாண தீவுகளில் பதிவான 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த தொடர் நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நாட்டிற்கு ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்ற காமிக் புத்தகக் கணிப்பிலிருந்து உருவான வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்புப் பிரிவின் இயக்குநரான எபிட்டா தெரிவிக்கையில், நமது தற்போதைய அறிவியல் அறிவைக் கொண்டு, நிலநடுக்கத்தின் சரியான நேரம், இடம் அல்லது அளவைக் கணிப்பது கடினம் என்றார்.
சனிக்கிழமை மீண்டும் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் அறிவியல் ஆதாரத்துடன் மக்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
Ryo Tatsuki என்ற காமிக் புத்தகக் கலைஞரின் The Future I Saw என்ற 1999ல் வெளியான நூலில் சுனாமி மற்றும் மிக மோசமான நிலநடுக்கம் குறித்த பதிவு தீயாக பரவியது.
இந்த புத்தகம் 2021ல் மீண்டும் வெளியிடப்பட்ட நிலையில், அவர் ஒன்றும் தீர்க்கதரிசி அல்ல என நூல் வெளியீட்டாளரால் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.