கோலாலம்பூர், பிப்ரவரி 21, 2026:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, புளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்திற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்துள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அசாம் பாக்கி நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் மில்லியன் கணக்கான பங்குகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் ஆதாரமற்றது என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி அசாம் பாக்கி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
‘Bloomberg LP’ மற்றும் ‘Bloomberg (Malaysia) Sdn Bhd’ ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனது நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக RM100 மில்லியன் இழப்பீடு கோரி அவர் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பொருத்தமான இழப்பீடு மற்றும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) ஆகியவற்றை அவர் கோரியுள்ளார்.
“எங்கள் கட்சிக்காரர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை. தனது நற்பெயரைப் பாதுகாக்கவும், உண்மையை நிலைநாட்டவும் அவர் இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தின் முன் இருப்பதால், அனைவரும் நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று , அசாம் பாக்கியின் சார்பில் ஆஜராகும் ‘Zain Megat & Murad’ சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் குறிப்பிட்ட நிதிச் சேவை நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகள் சுமார் RM800,000 மதிப்புடையவை என்றும், அவை மிகவும் வெளிப்படையான முறையிலும், முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே வாங்கப்பட்டவை என்றும் அவர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். எதையும் மறைப்பதற்குத் தன்னிடம் இல்லை என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.




