கடந்த 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைநகர் தில்லியில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, எட்டு வாரங்களுக்குள் குறைந்தது 5,000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்களை நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது எச்சரித்திருந்தது.
தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக கடந்த ஜூலை 28ஆம் தேதி இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெருநாய் கடித்த சம்பவங்களை ‘மிகவும் கொடூரமானது’ என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

