புத்ராஜெயா:
பிரதமரின் அரசியல் செயலாளராக இருந்த ஷம்சுல் இஸ்கந்தர் இன்று தாம் பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை நேரடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைத்ததாக அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
ஆறு நாட்களுக்கு முன், 2024 மருத்துவமனை திட்ட ஒப்பந்தத்திற்கு ஆதரவு கடிதம் வழங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் தமது அரசியல் செயலாளரை மிகவும் கடுமையாக கண்டித்ததால் அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.
தன்னை குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறிய ஷம்சுல் இஸ்கந்தர், அவை மடானி அரசாங்கத்தின் பிம்பத்தையும் சேதப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார்.
“மடானி அரசாங்கத்தை பாதிக்க முயற்சிக்கும் சில தரப்பினரின் தாக்குதல்களில் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் பதிவு செய்துள்ளார்.
பிரதமர் அன்வார் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும், இணைந்து பணியாற்றிய வாய்ப்பிற்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.
சமீபத்தில் 2024 மருத்துவமனை கட்டுமான திட்டத்துக்கான ஒப்பந்ததாரருக்கு, அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மீறி ஆதரவு கடிதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைப்பற்றிக் கேள்வி எழுந்தபோது, பிரதமர் அன்வார் மிகத் தெளிவாகவும் திடமாகவும் ஷம்சுல் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அரசியல் சூழல் தொடர்ந்தும் பரபரப்பாக உள்ள நிலையில், இந்த ராஜினாமா அரசாங்கத்தினுள் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
The post அழுத்தம் அதிகரிப்பு : அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஷம்சுல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

