Business
oi-Vigneshkumar
டெல்லி: நாட்டின் முக்கியமான டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், 2025-26 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச தொகையை ஏர்டெல் டிவிடெண்டாக அறிவித்துள்ள நிலையில், அதை நாம் பெறுவது எப்படி. அதற்கான ரெக்கார்டு டேட் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல டெலிகாம் நிறுவனங்கள் இருந்த நிலையில், இப்போது வெறும் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு இடையே தான் இப்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது.

டிவிடெண்ட்
இதற்கிடையே ஏர்டெல் நிறுவனம் இந்தாண்டு தனது முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக ரூ.24 வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு ரூ.24 வழங்கப்படும். ஏர்டெல் நிறுவனம் இதுவரை வழங்கிய டிவிடெண்ட் தொகையில் இதுதான் அதிகபட்ச தொகையாகும். இது தொடர்பான செய்திக்குறிப்பை ஏர்டெல் நிறுவனம் பங்குச்சந்தைகளுக்கு அனுப்பியுள்ளது.
ரெக்கார்டு தேதி
மேலும், இதற்கு ரெக்கார்டு தேதியாக ஜூலை 24-ஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 24ம் தேதி யாரிடம் எல்லாம் இந்த பங்குகள் இருக்கிறதோ.. அவர்களுக்கு மட்டுமே இந்த டிவிடெண்ட் கிடைக்கும். உங்களுக்கு டிவிடெண்ட் வேண்டும் என்றால் ரெக்கார்டு தேதி ஜூலை 24ஆக இருப்பதால்.. அன்றைய தினம் கண்டிப்பாக நீங்கள் ஏர்டெல் பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
இப்போது பங்குச்சந்தைகளில் செபி விதிமுறையின்படி T+1 செட்டில்மென்ட் என்ற நடைமுறையே அமலில் இருக்கிறது. இதன் காரணமாக டிவிடெண்ட் பெற விரும்புவோர் ஜூலை 23ஆம் தேதிக்குள் ஏர்டெல் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். அப்போது தான் அந்த பங்குகள் ரெக்காரடு தேதிக்குள் முதலீட்டாளர்களின் டிமாட் கணக்கில் பிரதிபலிக்கும். இது நடந்தால் மட்டுமே டிவிடெண்ட் கிடைக்கும்.
இதுவே அதிகபட்சம்
கடந்த மே மாதம் நடைபெற்ற ஏர்டெல் இயக்குநர் குழு கூட்டத்தில், 2025-26 நிதியாண்டிற்கு இறுதி டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு ரூ.24 வழங்க பரிந்துரைத்தது. அதன்படியே இப்போது டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல் வரலாற்றிலேயே அந்நிறுவனம் வழங்கும் அதிகபட்ச டிவிடெண்ட் இதுவாகும். இதற்கு முன்பு கடந்தாண்டு 2025ல் ஏர்பெட் ஒரு பங்கிற்கு ரூ.16 டிவிடெண்ட் வழங்கியிருந்தது. அதற்கு முந்தைய 2024 ஆண்டில் ரூ.8 மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது ரூ.24 என்ற அதிகபட்ச தொகை டிவிடெண்ட்டாக வழங்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் தற்போதைய டிவிடெண்ட் யீல்ட் சுமார் 0.84 சதவீதமாக உள்ளது.
ஏர்டெல்
2025-26 நிதியாண்டின் கடைசி காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ஏர்டெல்லின் நிகர லாபம் ரூ.7,325 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இருந்த ரூ.6,631 கோடி லாபத்தை விட இது அதிகமாகும். ஒவ்வொரு ஏர்டெல் யூசரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாயை பொருத்தவரை, அது முந்தைய காலாண்டில் ரூ.259ஆக இருந்தது. இப்போது அது சற்றே குறைந்து ரூ.257ஆக சரிந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சராசரி வருவாய் ரூ.245ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Revenue from Operations எனப்படும் வருவாய் ரூ.53,982 கோடியில் இருந்து ரூ.55,383 கோடியாக, அதாவது 2.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல EBITDA ரூ.30,783 கோடியில் இருந்து ரூ.31,492 கோடியாக 2.3 சதவீதம் வளர்ந்துள்ளது.



