ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை கண்காணிக்க, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரானின் போக்குவரத்து கமராக்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலில் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அவருடன் இராணுவ உயரதிகாரிகள், அமைச்சர்கள் என, பலரும் உயிரிழந்தனர்.
இது சாத்தியமானது எப்படி என ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து கண்காணிப்பு கமரா அமைப்புக்குள் ஊடுருவிய மொசாட்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் செயல்படும் விரிவான போக்குவரத்து கண்காணிப்பு கமரா அமைப்புக்குள் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட், சில ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்தது.

அந்த அமைப்பை இஸ்ரேல் தன் உளவு நடவடிக்கைக்காக பயன்படுத்தியது.
சமீபத்தில் அதில் ஒரு கமராவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு குழுவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை தெளிவாக காட்டும் கோணத்தில் அமைந்திருந்தது.
பணியாளர்களின் முகவரி, பணிச்சுழற்சி, அவர்கள் பாதுகாத்த நபர்கள், தினசரி இயக்கம் ஆகிய விபரங்கள் தொகுக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள் அடையாளம் காணப்பட்டன.
கிடைத்த தகவல்மூலம் வரைபடமாக்கப்பட்ட கமேனியின் நகர்வுகள்
இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் மென்பொருட்கள் மூலம் அலசப்பட்டன. கமேனியின் நகர்வுகள் வரைபடமாக்கப்பட்டு, அவர் கடந்த 28ம் திகதி தெஹ்ரானின் பாஸ்துார் வீதியில் ஒரு கூட்டத்தில் பங்கேற்பது தெரிந்தது.

அதையே இறுதி இலக்காக வைத்து அவரைக் கொல்ல முடிவு செய்தனர். பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள் பரிமாறப்படாமல் தடுக்க, மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் படைகள் இணைந்து நடத்திய குண்டு வீச்சில் கமேனி கொல்லப் பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் இருந்து, 1,900 கி.மீ., துாரத்தில் உள்ள ஈரான் தலைநகர் தெஹ்ரானில், போக்குவரத்து கமராக்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

