மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவை (பெர்மிம்), இமிம் மற்றும் முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா) ஏற்பாட்டில் நடைபெற்ற 6ஆவது மிலாது மாநாடு, “அறநெறி வாழ்வியல் – அருள்பெற்ற சமூகம்” என்ற கருப்பொருளில் கோலாலம்பூரில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து ஆலிம்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மஜ்லிஸ் அகமா இஸ்லாம் விலாயா பெர்செகுத்துவான் (MAIWP) தலைவர் டத்தோ சையத் கமருல்சாமான் பின் சையத் கபீர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் அறநெறி போதனைகளும் இன்றைய சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை என்றும், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.


பெர்மிம் தேசியத் தலைவர் ஜனாப் முகம்மது அஸ்மான் ஷா பேசுகையில், மனிதநேயம், ஒற்றுமை, சமூகப் பொறுப்பு மற்றும் இளைஞர்களின் நற்பண்பு வளர்ச்சியில் மிலாது மாநாடு முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். சமூக முன்னேற்றத்திற்கு அறநெறி அடிப்படையிலான வாழ்வியலே சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த பண்புகள், ஒழுக்கம், கருணை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானவை என்றார். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அறநெறி சார்ந்த வாழ்வியலை அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


மாநாட்டின் சிறப்பு அம்சமாக, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. கல்வியின் மூலம் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெர்மிம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டதாக பெர்மிம் தேசியத் தலைவர் அஸ்மான் ஷா தெரிவித்தார். மேலும், சமூக சேவையில் சிறந்து விளங்கிய டாக்டர் Y. மன்சூர் மரைக்கான் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான “தொக்கோ பெர்மிம் மௌலிதுர் ரசூல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக இளைஞர் மேம்பாடு மற்றும் அறநெறி விழுமியங்கள் தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற்றன. அந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி பேச்சாளர்களான, டத்தோ பேராசிரியர் டாக்டர் ஃபரீத் ரவி அப்துல்லா, முன்னாள் தேசிய காவல்துறை துணைத் தலைவர் தான் ஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை மற்றும் உஸ்தாஸ் டாக்டர் பஷீர் அல்-அஸ்ஹரி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.


மேலும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி தான் ஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சைக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது. இந்த 6ஆவது மிலாது மாநாட்டில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர். இந்தியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
மாநாடு முழுவதும் சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்வியலின் அவசியம் குறித்து பல்வேறு உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. மேலும், இந்நிகழ்ச்சி யூடியூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டதில் 7,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



