இதற்கு தீர்வு காணும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கெனத் தனி நேர மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. 2018-ஆம் ஆண்டில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ நேரத்தைக் கணக்கிடும் ‘தேசிய இயற்பியல் ஆய்வகம்’ (CSIR-NPL), இந்தியாவுக்கு IST-I, IST-II என இரண்டு நேர மண்டலங்கள் தேவை என்ற பரிந்துரையை முன்வைத்தது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் ‘பகலொளி சேமிப்பு நேரம்’ என்ற திட்டமும் விவாதிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கியும், குளிர்காலத்தில் இயல்பு நிலைக்கும் மாற்றுவதே இத்திட்டம். ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையுமே மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் நிராகரித்துவிட்டன. ஒற்றை ரயில்வே வழித்தடங்கள் அதிகம் உள்ள இந்தியாவில், நேர மண்டலங்கள் மாறினால் ரயில்கள் நேருக்கு நேர் மோதும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும், வங்கி, மின்நிலையங்கள் போன்ற துறைகளில் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

