Last Updated:
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அறுவை சிகிச்சை நடந்த அரசு மருத்துவமனையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கர்ப்பப்பையில் நார்த்திசுக்கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்த பெண் ஒருவருக்கு வயிற்றில் கத்திரிக்கோல் இருந்ததால் அதிர்ச்சி. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அறுவை சிகிச்சை நடந்த அரசு மருத்துவமனையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உஷா ஜோசஃப் என்ற பெண்ணொருவருக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக்கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் அடிக்கடி அவர் அசௌகரியமாகவும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அதே மருத்துவமனையை அணுகியபோதும், அப்பெண்ணுக்கு ஏன் வலி ஏற்பட்டது என்பதை மருத்துவர்கள் அறியாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வயிற்று வலிக்காக வேறொரு மருத்துவரை அவர் அணுகியுள்ளார். அவர்கள் முதலில் சிறுநீரகக் கட்டியாக இருக்குமோ என நினைத்து எக்ஸ்-ரே செய்ய பரிந்துரைத்துள்ளனர். அப்போதுதான் சர்ஜரியின் போது பயன்படுத்தப்படும் கத்திரிக்கோல் அப்பெண்ணின் வயிற்றில் இருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உஷாவின் மகன் ஷிபின் தற்போது ஊடகங்களில் தெரிவித்துள்ளார். ஷிபினின் பேட்டிகளின்படி மருத்துவர்களின் அலட்சியம் வெளிவந்தபின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தாங்களே உரிய மேற்சிகிச்சையை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உஷாவின் குடும்பம் அவர்களை நம்ப மறுத்து எர்ணாக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உஷாவை அனுமதித்து கத்திரிக்கோலை அகற்றியுள்ளனர். மேலும் உஷாவின் மகன் ஷிபின், சிகிச்சையை செய்த மருத்துவர்களிடம் இழப்பீடு கோரியபோது ‘வேண்டுமென்றால் மருத்துவ அலட்சியம் என்று வழக்கு தொடர்ந்துகொள்’ என்று மிரட்டியதாக தெரிகிறது. மேலும் சிகிச்சை செய்த லலிதாம்பிகா என்ற மருத்துவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர் உஷாவின் குடும்பத்தினர். இருப்பினும் மருத்துவர் லலிதாம்பிகா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், “நான் தலைமை தாங்கிய துறையில் சிகிச்சை நடந்தது. நான் அதனை முன்னின்று செய்யவில்லை. மட்டுமன்றி இந்த சர்ஜரி கொரோனா காலத்தில் நடந்துள்ளது. அப்போது நான் பிற அவசர சிகிச்சை பணிகளில் இருந்தேன்” என்றுள்ளார்.
இத்துடன் மருத்துவர் லலிதாம்பிகா அந்த அறுவை சிகிச்சையின்போது அங்கிருந்த செவிலியரை, சரியாக சர்ஜிக்கல் பொருட்களை கையாளாததற்காக சாடியுள்ளார். மேலும் இதுபோன்ற சர்ஜரி பொருட்கள் வயிற்றுக்குள் 10 வருடங்கள் இருந்தாலும் அதனால் பாதிப்பொன்றும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் மருத்துவர் லலிதாம்பிகாவின் கூற்றை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நிராகரித்துள்ளார்.

வீணா ஜார்ஜ், “மருத்துவரொருவர் தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. இப்படியொரு அறுவை சிகிச்சை நடந்ததை அவர் நினைவில் வைத்திருக்கிறார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தனது கண்காணிப்பின் கீழ் நடக்கவில்லை என்கிறார். மேலும் இந்த சம்பவம் முழுக்க முழுக்க அலட்சியமே என்றும், காவல்துறை விசாரணையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுத்த பெண்ணின் கர்பப்பையில் 5 ஆண்டுகளாக கிடந்த சர்ஜரி கத்திரிக்கோல்… அலட்சியமாக பதில் சொன்ன மருத்துவர்!


