அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! பெண் ஊழியர்கள் ஹேப்பி..!!
அரசு வேலையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுவாக பெண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது ஓராண்டு காலம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு முக்கிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு, மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது வரை அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கு மட்டும் தான் ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டவர்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதிமுறையை மாற்ற வேண்டும் என பெண் ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, மூன்றாவது குழந்தைக்கும் பெண் ஊழியர்கள் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் டி.சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு சமூக நலனுக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு நிர்வாகம் என கூறிய அவர், அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 12 வார விடுப்பு, 365 நாட்களாக உயர்த்தப்படுகிறது, என தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டுக்கு முன்பு 90 நாட்களாக இருந்த மகப்பேறு விடுப்பு, 2011இல் ஆறு மாதங்களாகவும், பின்னர் 2016இல் ஒன்பது மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. இறுதியாக, ஜூலை 2021இல் இது 365 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, தற்போது மூன்றாவது குழந்தைக்கும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மூலம், பெண் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்ப நலனை பேணுவதோடு, பணி வாழ்வையும் சிறப்பாக சமன் செய்ய முடியும். இதன் மூலம் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்ள அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே குழந்தைப்பேறு குறைந்து வருவதாக அரசு கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழந்தை பேற்றை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தனியார் நிறுவனங்களில் தான் வேலை செய்கின்றனர். அங்கே 6 மாதங்கள் வரை தான் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

