Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், டெல்லி அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார்.
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவிற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதையும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இதற்கிடையில், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தபின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வரும் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில் ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராகவும், எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துவந்தார். இதற்காக ஓய்வூதியம் கேட்டு ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் அவர் விண்ணப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, தற்போது டெல்லியில் அவர் தங்கியிருந்த அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த அவர், சத்தர்பூர் என்க்ளேவில் உள்ள இந்திய தேசிய லோக் தளம் தலைவர் அபய் சிங் சவுதாலாவின் பண்ணை வீட்டிற்கு குடிபெயர்வர் என்று கூறப்படுகிறது.
September 01, 2025 8:54 PM IST


