Last Updated:
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி மற்றும் அமைச்சர் சுரேஷுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதி மற்றும் அம்மாநில அமைச்சர் சுரேஷுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மாற்று நிலத்தை ஒதுக்கியது. அதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்துசெய்ததை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை நோக்கி தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்ததோடு கண்டனத்தையும் பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் பணியாற்றிய போது தனக்கு சில அனுபவம் உள்ளது என கூறிய தலைமை நீதிபதி, தயவுசெய்து தங்களை ஏதாவது சொல்ல கட்டாயப்படுத்தாதீர்கள் என்றார்.
அமலாக்கத்துறைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டி இருக்கும் என்று கூறியதோடு, அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும், அரசியலுக்காக அமலாக்கத்துறையை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
July 21, 2025 2:38 PM IST
“அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும்” – அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்


