India
oi-Vigneshkumar
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அங்கு கோயிலில் டெலிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை தடயவியல் நிபுணர்கள் மீட்டுள்ளதாகவும், அதில் கோயில் ஊழியர் ஒருவர் பணத்தை சாக்ஸில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரார்த்தனை செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ராமர் கோயில் காணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது பெரிதாக வெடித்துள்ளது. அதாவது கோயில் ஊழியர்களே ராமர் கோயில் காணிக்கையை திருடியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

திடுக் தகவல்கள்
இந்தச் சூழலில் தான் சில திடுக் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. இந்த வழக்கில், ராமர் கோயிலின் காணிக்கை எண்ணும் அறையில் இருந்த சிசிடிவி பதிவுகள் சில டெலிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை தடயவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட காட்சிகளில், சில ஊழியர்கள் காணிக்கை பணத்தை எண்ணிக்கொண்டிருந்தபோது, நோட்டுகளை சாக்ஸ் மற்றும் சட்டைப் பைகளில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
வீடியோ
மீட்கப்பட்ட வீடியோவின் குவாலிட்டி சரியாக இல்லாத நிலையில், தற்போது அந்த வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருடுவது யார் என்பது வீடியோவில் தெளிவாகத் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் அயோத்தி மாவட்ட சிறையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். ராமசங்கர் மிஸ்ரா, மனிஷ் யாதவ், லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, கருணேஷ் பாண்டே ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
வட்டாட்சியர் அசுதோஷ் திவாரி தலைமையிலான போலீஸ் குழு, திருடப்பட்ட பணம் எப்படி பங்கிடப்பட்டது, ஒவ்வொருவரின் பங்கு என்ன, காணிக்கை எண்ணும் அறையிலிருந்து பணத்தை எப்படி வெளியே எடுத்துச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தியது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையை பாதிக்கக்கூடிய வகையில் குற்றவாளிகள் ஒருவருடன் ஒருவர் ஆலோசனை நடத்துவதை தடுக்க.. சிறை நிர்வாகம் அனைவரையும் தனித்தனி அறைகளுக்கு மாற்றியுள்ளது. முன்னதாக அவர்கள் ஒரே பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சாட்சியங்களை மாற்றி கூறுவது அல்லது ஒரே மாதிரியான விளக்கங்களை கொடுப்பதை தடுப்பது ஆகியவற்றுக்காக இதுபோல தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிக்கும் போலீஸ்
இதற்கிடையில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பணத்தை டிராக் செய்து கண்டறியவும் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் நிதி பதிவுகள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் தகவல்கள், நிதி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணையின் மூலம், காணிக்கை பணம் எவ்வளவு அளவில் முறைகேடு செய்யப்பட்டது.. அதில் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

