Last Updated:
அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி காவிக் கொடியை ஏற்றி, தொலைதூரத்தில் இருந்து வணங்கினாலும் அதே புண்ணியம் கிடைக்கும் என தெரிவித்தார்.
“கோயிலுக்கு வந்து நேரில் வணங்க முடியாதவர்கள், தொலைதூரத்தில் இருந்து கோயில் கொடியை வணங்கினாலே, நேரில் வணங்கியவர்களுக்கு கிடைக்கும் அதே புண்ணியம் கிடைக்கும் என்று நமது வேதங்கள் கூறுகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அந்தக் கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவிக் கொடியை ஏற்றினார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்திக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்குச் சென்று பிரதமர் வழிபட்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ராமர் கோயிலுக்குச் சென்றார். அங்கு இருவரும் வழிபட்டனர்.
வடமாநிலக் கட்டடக் கலைப்படி கட்டப்பட்ட ஷிகர் எனப்படும் 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் மோடி காவி நிறக் கொடியை ஏற்றினார். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. முக்கோண வடிவில் 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட இந்தக் கொடியில் சூரிய வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமடைந்துள்ளன. 500 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அந்தத் தியாகத்தின் நிறைவு நாள். இது வெறும் காவிக் கொடி அல்ல, இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி.
கோயிலுக்கு வந்து நேரில் வணங்க முடியாதவர்கள், தொலைதூரத்தில் இருந்து கோயில் கொடியை வணங்கினாலே, நேரில் வணங்கியவர்களுக்குக் கிடைக்கும் அதே புண்ணியம் கிடைக்கும் என்று நமது வேதங்கள் கூறுகின்றன. இந்த மறக்க முடியாத தருணத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
November 25, 2025 2:38 PM IST


