Last Updated:
பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை அம்பேத்கரின் கொள்கைகளை அழிக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டினார். வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலை பரப்புவதாகவும் விமர்சித்தார்.
வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் வைரஸை காங்கிரஸ் கட்சி பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் புதிய விமான நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து அயோத்திக்கு விமான சேவையை தொடங்கிவைத்தார். மேலும், புதிய முனைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கர் முயற்சி செய்ததாகக் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் கொள்கைகளை அழிக்க முயற்சி செய்ததாக விமர்சித்தார். ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அரசியலமைப்பை வெறும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்கள் : போஸ்டர் ஒட்டியவர் மீது நடவடிக்கை.. செல்வப்பெருந்தகை உறுதி
ஏழைகள் மற்றும் ஆதிவாசிகளின் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது வக்ஃபு வாரிய சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் வைரஸை காங்கிரஸ் கட்சி பரப்புவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
இஸ்லாமியர்களின் நலனில் அக்கறையில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இஸ்லாமியரை நியமிக்காதது ஏன் என்றும், மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்காதது ஏன் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் குற்றச்சாட்டுக்கு டெல்லியில் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். அம்பேத்கரின் எந்தெந்த கொள்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்றும், இதுதொடர்பாக இதுவரை செய்தது என்ன என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
April 14, 2025 6:58 PM IST


