Last Updated:
சேலம் மாவட்டத்தில் மாம்பழ சீசன் களைக்கட்டி வருகிறது. மாம்பழத்திற்கான சீசன் துவங்கியுள்ளதால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சேலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும். அந்த வகையில் தற்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ளதால், சேலம் சுற்று வட்டார பகுதிகளான சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் சந்தைக்கு வருகிறது. அது மட்டுமில்லாமல், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வரத்து வர துவங்கியுள்ளது.
சேலம் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள குடோன் மற்றும் கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 டன் மாங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச்சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் சாலையோரங்களில் மாம்பழம் குவித்து வியாபாரம் செய்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ.80முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு மாம்பழம் சீசன் களைகட்டும். ஜூன் 30ம் தேதிக்கு மேல் சீசன் குறையும். ஜூலை கடைசியில் மாம்பழம் சீசன் முடிவடையும்.
விற்பனை குறித்து மாம்பழ வியாபாரி கூறியதாவது; ” சேலம் மாவட்டத்திற்கு மிகவும் பிரபலமானது மாம்பழம் தான். சித்திரை மாதம் முதல் மாம்பழம் சீசன் துவங்கி விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அது மட்டும் இல்லாமல் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் வரத்து சேலத்திற்கு வருகிறது. நாங்கள் சேலம் மார்க்கெட்களிலிருந்து கொள்முதல் செய்து நெடுஞ்சாலையோரம் விற்பனை செய்து வருகிறோம்.
மாம்பழ ரகங்களில் சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா போன்ற பல்வேறு வகையான ரகங்கள் உள்ளது. ஒவ்வொரு ரகங்களும் ஒவ்வொரு விதமான சுவைகளை கொண்டுள்ளது. சேலத்தில் மிகவும் பிரபலமான மாம்பழம் என்றால் அது சேலம் பெங்களூரா தான் இவை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாம்பழத்தின் தரத்தினை பொறுத்து ரூ.80 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்” என்றார் வியாபாரி.
Salem,Salem,Tamil Nadu

