அம்பானி JIO நிறுவனத்தின் உரிமையாளர் இல்லையா? IPO ஆவணத்தில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிட உள்ளது. நடப்பாண்டின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டாக ஜியோ ஐபிஓ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆவணங்களை ஜியோ நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்துள்ளது. அதன் ஜியோவின் உரிமையாளர் யார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ, ரிலையன்ஸுக்கு உட்பட்ட ஒரு நிறுவனம் என்பதால் பெரும்பாலானவர்கள் இந்நிறுவனம் முழுமையாக ரிலையன்ஸ் குழுமத்திற்கும் முகேஷ் அம்பானிக்கும் சொந்தமானது என நினைப்பார்கள். ஆனால் DRHP தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் ஜியோவின் 100% பங்குகள் இல்லை. ஜியோவில் மெட்டா , கூகுள் மற்றும் பல்வேறு உலகளாவிய நிதி நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் கணிசமான பங்குகளை வைத்துள்ளனர்.

ஜியோ தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் என்பது தான் நிறுவனத்தின் பெயர். இதில் 105 பங்குதாரர்கள் உள்ளனர். இதில் அம்பானி உள்பட யாருக்கெல்லாம் எவ்வளவு பங்கு உள்ளது என்பதை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் : 66.43% பங்குகள்
மெடா : 9.98% பங்குகள்
கூகுள் : 7.73% பங்குகள்
சவுதி அரேபிய அரசின் முதலீட்டு நிறுவனம்: 2.31% பங்குகள்
மைக்ரான் ஏசியா ஹோல்டிங்ஸ் : 2.31%
விஸ்டா ஈக்விட்டி: 2.31% பங்குகள்
அபுதாபி முதலீட்டு ஆணையம்: 1.16% பங்குகள்
எனவே அம்பானி மட்டுமே ஜியோ நிறுவனத்தின் முழுமையான உரிமையாளர் கிடையாது. மெடா, கூகுள் ஆகியவையும் பகுதி உரிமையாளர்கள் தான் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. எனவே ஜியோ நிறுவனத்தின் லாப நஷ்டத்தில் இந்நிறுவனங்களுக்கும் பங்கு உள்ளது.
ஜியோ ஐபிஓ-வில் தோராயமாக 27 கோடி புதிய ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இது வெளியீட்டிற்குப் பிந்தைய ஒட்டுமொத்த ஈக்விட்டி மதிப்பில் சுமார் 2.9% ஆகும். இந்த ஐபிஓ-வில்ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் யாரும் தங்கள் பங்குகளை விற்று வெளியேறவில்லை.
இந்த ஐபிஓ மூலம் சுமார் 37,700 கோடி ரூபாய் நிதி திரட்டப்படவுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜியோவின் ஒரு பங்கு விலை வரம்பை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் மொத்த மதிப்பீடு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமான 10.87 லட்சம் கோடி ரூபாயை விட சற்று அதிகம்.
அக்டோபர் 21 முதல் ஜியோ ஐபிஓ விண்ணப்பம் தொடங்கி அக்டோபர் 23 வரை நடக்கும் என்றும் இம்மாத இறுதியிலேயே பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் இந்த மெகா ஐபிஓ இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது, மேலும் இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய பங்கு சந்தைக்கும் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

