கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அம்பாங், ‘தாமான் சகாயா’ அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போன 17 வயது சிறுவனைக் கண்டுபிடிக்கக் காவல் துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காணாமல் போன சிறுவன் முஹமட் கைருல் இக்வான் அமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் கைருல் அன்வார் காலித் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சிறுவன் தனது படுக்கையறையில் இல்லாததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால், அவனது தந்தை நேற்று பிற்பகல் 12:18 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சிறுவன் தனது தந்தையின் ‘PPV 1705’ எனும் பதிவெண் கொண்ட ஊதா நிற ‘Yamaha Y15’ மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்சிறுவனையோ அல்லது அவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளையோ கண்டறிபவர்கள் அல்லது அவனைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் தலைமையகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



