ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வாரங்களுக்கும் தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வான அமேசான் பிரைம் டே சேல் 2025-ன் ஒன்பதாவது பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை இந்தியா மற்றும் பிற சந்தைகளிலும் ஒரே நேரத்தில் வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. பிரத்யேகமாக, அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விற்பனையை அணுகும் வசதி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் பொருட்கள் மற்றும் ஆடைகள் என பல்வேறு பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அமேசானின் சொந்த தயாரிப்பான எக்கோ மற்றும் ஃபயர் டிவி சாதனங்களுக்கும் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அமேசான் பிரைம் டே சேல் 2025:
பிரைம் டே சேல் 2025 ஆனது, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என்று அமேசான் கூறுகிறது. அமேசானின் வருடாந்திர ஷாப்பிங் திருவிழாவின் ஒன்பதாவது பதிப்பு இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் லைவில் வரும்.
அமேசானின் தெரிவித்துள்ள தகவல்படி, விற்பனையின் போது பிரைம் உறுப்பினர்கள் மட்டுமே சலுகைகளை பெறத் தகுதி பெறுவார்கள். இது, ஏற்கனவே உள்ள மற்றும் புதிய விற்பனையாளர்களிடமிருந்து பிரத்யேக சலுகைகள், விரைவான மற்றும் இலவச விநியோகத்துடன் கூடிய சேவையை பெற உதவும். கூடுதலாக, இந்த விற்பனையானது எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு மற்றும் சமையலறை பொருட்கள், ஃபேஷன் மற்றும் அழகுபடுத்தல், நகைகள் மற்றும் பிற தயாரிப்புகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் இருந்து புதிய பொருட்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழாவானது, அமேசான் இந்தியாவின் மிகப்பெரிய பிரைம் டே சேல் என்று நிறுவனம் குறிப்பிடுகிறது, அதாவது, அனைத்து முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அதிகமான பொருட்கள் விற்பனையாகின. 2023 பிரைம் டேவுடன் ஒப்பிடும்போது, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் (SMBகள்) விற்பனையில் 30 சதவீதம் அதிகரிப்பை காண முடிந்தது. எனவே, இந்த ஆண்டும் அதேபோல் அதிகரிப்பு இருக்கும் என்று அமேசான் எதிர்பார்க்கிறது.
கூடுதலாக, 41 கோடிக்கும் அதிகமான பொருட்கள் அதே நாள் அல்லது அடுத்த நாளில் டெலிவரி செய்யப்பட்டன மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்கள் டெலிவரி கட்டணத்தில் சராசரியாக ரூ. 3,300 வரை சேமித்தனர்.
அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷனின் நன்மைகள் மற்றும் விலை:
இந்தியாவில் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் சந்தாவின் ஒரு ஆண்டு திட்டத்திற்கு ரூ. 1,499 செலவாகிறது. வாடிக்கையாளர்கள் ரூ. 299 மற்றும் ரூ.599 விலையில் ஒரு மாத மற்றும் மூன்று மாத பிரைம் திட்டங்களையும் தேர்வு செய்யலாம். இது, அதே நாள் மற்றும் ஒரு நாள் டெலிவரி ஆப்ஷன்கள், குறைந்தபட்ச ஆர்டர் தேவை இல்லாமல் இலவச ஷிப்பிங், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆர்டர்களுக்கு கேஷ்பேக் மற்றும் அதிரடி சலுகைகளுக்கான உடனடி அணுகல் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
மேலும், பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், பிரைம் கேமிங் மற்றும் பிரைம் ரீடிங் போன்ற அமேசானுக்குச் சொந்தமான பிற தளங்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் பிரைம் லைட் அல்லது பிரைம் ஷாப்பிங் திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
May 04, 2025 11:49 AM IST

