முகமூடி அணிந்த தீவிரவாதி சொட்லொஃபைக் கழுத்து வெட்டி கொல்வதாக வீடியோவில் வருகிறது
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் காட்டிய வீடியோ உண்மையானதுதான் என அமெரிக்கா உறுதிசெய்துள்ளது.
கத்தி ஏந்தி நிற்கும் முகமூடி அணிந்த ஆசாமி ஒருவர் சொட்லொஃபைக் கொல்வதாக காட்டும் இந்த வீடியோவை இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.
தாம் பிடித்துவைத்துள்ள பிரிட்டிஷ் பணயக்கைதி ஒருவரையும் கொல்லப்போவதாக இதே வீடியோவில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது தொடர்பில் விவாதிப்பதற்கென பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நெருக்கடி நிர்வாகக் குழுவுடன் பிரதமர் டேவிட் கெமரன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக அணிதிரள்வதை வெளிநாட்டு அரசாங்கங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என இங்கிலிஷ்காரர் பாணியில் ஆங்கிலம் பேசும் முகமூடியணிந்த ஜிகாதி ஒருவர் எச்சரிப்பது இந்த வீடியோவில் வருகிறது.