Last Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கவுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் ஆலோசனை.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும், பயனுள்ள பேச்சு நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், அலாஸ்காவிலிருந்து வாஷிங்டனுக்கு திரும்பியதும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நேட்டோ நாடுகளின் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெலன்ஸ்கி, டிரம்ப்புடன் தனியாக ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய தலைவர்களுடன் அரை மணிநேரம் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைதியை ஏற்படுத்த அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும், உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற டிரம்பின் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கு வரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொண்டு, அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
August 16, 2025 10:05 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்… முடிவுக்கு வருமா போர்?


