Last Updated:
நாங்கள் இருவரும் சேர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு சந்தித்தனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்தினார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டிரம்பை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் சந்தித்துப் பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அதிபர் டிரம்பை போலவே, இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார். மேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அரசின் செயல் துறை தலைவரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார்.
இதையும் படிக்க: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – உக்ரைன் போர்? – டிரம்ப் காரணமாக நிகழ்ந்த மாற்றம்!
வாஷிங்டனில் உள்ள பிளேர் ஹவுஸில் பிரதமர் மோடியை சந்தித்த எலான் மஸ்க், விண்வெளி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், ‘குறைந்தபட்ச அரசு.. அதிகபட்ச நிர்வாகம்..’ என்ற இந்தியாவின் சீர்திருத்த முயற்சி குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் நினைவுப் பரிசு வழங்கிய நிலையில், எலான் மஸ்க்கின் குழந்தைகளுக்குப் பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
எலான் மஸ்க் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்த பிரதமர் மோடி
எலான் மஸ்க்கை தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமியையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதேபோன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் (Michael Waltz) பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதில், சர்வதேச பாதுகாப்புக்கான சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
February 14, 2025 6:57 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி..! இருநாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என பேட்டி