அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவின் (ICE) தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளின் மரண விகிதம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஜனவரியில் தனது தீவிரமான அகதிகள் வெளியேற்றப் பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் கடந்த 2009 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சராசரியாக 3848 கைதிகளுக்கு ஒரு மரணம் என்ற அளவில் இருந்த விகிதம், ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு 1630 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் மிக மோசமாக அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தடுப்பு மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 70,000 ஆக உயர்ந்த நிலையில், ஜூன் மாத தொடக்க நிலவரப்படி சுமார் 50 பேர் இந்த முகாம்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்த மருத்துவ வல்லுநர்கள், முகாம்களில் வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் மோசமாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 பேர் சுயநினைவற்ற நிலையிலோ அல்லது இறந்த பின்னரோதான் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.
அகதிகள் முகாம்கள்
இதில் பத்து பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மாறாத இதய நோய்கள் மற்றும் போதைப்பழக்க மீட்சி போன்ற தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் நபர்களை அவசரப் பிரிவுக்கு அனுப்பாமல் முகாம்களிலேயே அடைத்து வைத்ததே இந்தத் தடுப்பு மரணங்களுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன் அகதிகள் முகாம்களில் பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான சூழல் உறுதி செய்யப்படுவதாகவும் வந்திறங்கும் தருணத்திலிருந்தே முறையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

