உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் மோதல்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலப் போர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் தயாராகி வரும்நிலையில், தரைக்கு அடியில் உள்ள பாதுகாக்கப்பட்ட இலக்குகளை அழிக்கும் திறனைக் கொண்ட புதிய ஏவுகணை அமைப்பு மூலம் தனது பதுங்கு குழி தடுப்புத் திறன்களை வளர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கண்டம்விட்டுக் கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பணியாற்றி வருகிறது. இது, முன்பிருந்த ஏவுகணை போலன்றி, 7,500 கிலோகிராம் எடையுள்ள மிகப்பெரிய பதுங்கு குழி தடுப்பு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஆயுதமாக இருக்கும். வழக்கமாக இந்த ஏவுகணை 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதோடு, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை, நிலத்தடியில், கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட எதிரி இலக்குகளை வலுவாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெடிப்பதற்கு முன்பு மேற்பரப்பிலிருந்து 80 முதல் 100 மீட்டர் கீழே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
ஈரானிய அணு ஆயுத தளங்களில் பதுங்கு குழிகளை தாக்கும் வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்காவின் இராணுவத் திறன்களைப் போலவே, இந்தியாவும் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு, தனது விலையுயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை பெரிதும் நம்பியுள்ளது அமெரிக்கா. ஆனால் இந்தியாவோ, ஏவுகணைகளைப் பயன்படுத்தி அனுப்பக்கூடிய வகையில் தனது பங்கர் பஸ்டர் குண்டுகளை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
ஒவ்வொரு குண்டுகளும் சுமார் எட்டு டன் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த குண்டுகளில் ஒன்றாகவும் உள்ளது.
அசல் அக்னி-5 உடன் ஒப்பிடும்போது, புதிதாக தயாரிக்கப்படும் ஏவுகணைகள் 2,500 கிமீ தூரத்திற்கும் குறைவாகவே தாக்கும் என்றாலும், அவற்றின் சக்திவாய்ந்த அழிவுத் திறனும், அதிக துல்லியமும் இந்தியாவின் ஆயுதங்களுக்கு மதிப்புமிக்கதாகவும், வலுவான சேர்த்தல்களாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்ட ஏவுகணைகள் மேக் 8 முதல் மேக் 20 வரையிலான வேகத்தில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவற்றை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் வகைக்குள் சேர்க்கிறது.
July 02, 2025 7:48 PM IST