Last Updated:
அமெரிக்கா ஈரானின் அணு உலைகளை தாக்கியதில் சேதம் ஏற்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
கடந்த 22 ஆம் தேதி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்கின. குறிப்பாக போர்டோ அணு உலை மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அணு உலைகள் முற்றிலும் சேதமடைந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த தாக்குதலில் பெரும் சேதம் இல்லை என்று ஈரான் மறுத்து வந்தது. மேலும் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை உடனடியாக தொடங்க உள்ளதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரானும் தங்களது அணு உலைகள் சேதமடைந்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் சேதமடைந்தது உண்மை தான் என தெரிவித்துள்ளார். ஆனால், சேத விபரம் குறித்த முழுமையான தகவல்களை பகிர மறுத்துவிட்டார்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இதையடுத்து, போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதை முதலில் மறுத்த ஈரான், ‘அமெரிக்க அதிபர் கெஞ்சுவதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக’ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
June 26, 2025 8:51 AM IST


