வங்கதேச வன்முறைக்கு அமெரிக்காவின் தலையீடு காரணம் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டதாக வெளியான தகவலை, அவரது மகன் சஜீப் வாசேத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நெருங்கிய நிலையில், தனது டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, ஷேக் ஹசீனா தனது நெருக்கமானவர்களுக்கு எழுதிய கடிதம் என ஒரு தகவல் பரவியது.
அதில், வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு மற்றும் வங்கக்கடல் பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்திருக்க முடியும் என ஷேக் ஹசீனா குறிப்பிட்டதாக கூறப்பட்டது.
ஆனால், அதனை தான் விரும்பவில்லை என்றும், மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் கடிதத்தில் ஹசீனா குறிப்பிட்டதாகவும், பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் இந்த தகவலை மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், சமீபத்தில் தனது தாயார் பதவி விலகியது தொடர்பாக அவரது அறிக்கை என வெளியானது முற்றிலும் புனையப்பட்டது என்று தெரிவித்துள்ளார். டாக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஷேக் ஹசீனா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை தான் அவரிடமே உறுதிப்படுத்தியதாகவும் ஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
