Last Updated:
அமெரிக்காவின் ராக்கீஸ் மலைத்தொடர் பகுதிகளில் மிக அரிய குளிர்காலப் புயல் தாக்க உள்ளது.
அமெரிக்காவில் கோடைகாலம் உச்சத்தில் இருக்க வேண்டிய ஜூன் மாதத்தில், ராக்கீஸ் மலைத்தொடர் பகுதிகளில் மிக அரிய குளிர்காலப் புயல் தாக்க உள்ளது.
வழக்கமாக ஜூன் மாத இறுதியில் அமெரிக்காவில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது வீச உள்ள இந்த அரிய புயல் காரணமாக ராக்கீஸ் மலையின் உயரமான பகுதிகளில் 6 முதல் 12 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாக உள்ளது. குறிப்பாக, மொன்டானா, வயோமிங், இடாஹோ மற்றும் கொலராடோ ஆகிய மாநிலங்களின் மலைப் பகுதிகள் இந்த திடீர் பனிப்பொழிவால் வெள்ளைப் போர்வையாக மாற உள்ளன.
கனடாவில் இருந்து வீசும் மிகக் குளிர்ந்த காற்றும், பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்றும் ராக்கீஸ் மலைப்பகுதியில் ஒன்றாக இணைவதே கோடைக் காலத்தில் குளிர்காலப் புயல் உருவாகக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதத்தில் பனிப்பொழிவை எதிர்பார்க்காமல் மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வந்துள்ள மக்கள் மற்றும் மலையேற்ற வீரர்களுக்கு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளில் பனி உறைந்து வழுக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


