எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்கும் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப், “நினைவில் கொள்ளுங்கள், நவம்பர் 5 அதிபர் தேர்தல் தேதி அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான தேதி என நான் நம்புகிறேன். ஜோ பைடன் மோசமான அதிபர். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த கார்களை அவர்களால் விற்க முடியாது.
இந்த முறை நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த நாட்டையும் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளி விடும் (Bloodbath). தீவிரவாதம், வன்முறை மீதான ஜோ பைடனின் பாசம், அவரின் பழிவாங்கும் தாகம் அதனால் அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனென்றால் மக்கள் அதைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வேலைக்கான அனுமதிகளை வழங்கியதன் மூலம் ஜோ பைடன் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களை மீண்டும் மீண்டும் சோதனைக்குள்ளாக்கினார்” எனப் பேசினார்.