Last Updated:
அமெரிக்கா-உக்ரைன் இடையே சவுதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா சென்றுள்ளார்.
மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்கா- உக்ரைன் இடையே சவுதி அரேபியாவில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா சென்றுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொண்டு வந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட டிரம்ப், உக்ரைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கினார். குறிப்பாக, அமெரிக்கா செய்து வரும் நிதி மற்றும் ஆயுத உதவிக்கு கைமாறாக, உக்ரைனில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுக்க அனுமதி வேண்டுமென டிரம்ப் நிபந்தனை விதித்தார். இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு காட்டிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா சென்ற ஜெலன்ஸ்கி, அந்நாட்டு அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் வான்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பேச்சுவார்த்தையை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு வழங்கிய ராணுவம் மற்றும் நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவின் உதவியின்றி, ரஷ்யாவை எதிர்க்க முடியாததை உணர்ந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தையை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சவுதி அரேபியா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அந்நாட்டு உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு சவுதி இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை, அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். இந்தப் பேச்சுவார்தையின் மூலம், கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாவது உடன், போரை நிறுத்துவதற்கு அமெரிக்க முன்வைக்கும் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்கும் சூழல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
March 11, 2025 7:41 AM IST
அமெரிக்கா – உக்ரைன் மோதல் முடிவுக்கு வருமா..? சவுதி அரேபியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை