சீன இறக்குமதி பொருள்களுக்கு ஏற்கெனவே30 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.
கடந்த வாரம், சீனா தனது அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததைச் சுட்டிக்காட்டி, நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்திருக்கிறார்.
இது வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் பதில்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சீனாவின் வர்த்தக அமைச்சகம்.
ஆனால், அந்தப் பதிவில் செய்தித் தொடர்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அவர்களது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. நீண்ட காலமாக, ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த தேசப் பாதுகாப்பு என்பதை தவறாகப் பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா மற்றும் சீனா மீது பாரபட்சமாக நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகள் சீனாவின் நலனைப் பாதிக்கிறது. ஒவ்வொரு முறையும் வரியைக் காட்டி பயமுறுத்தி சீனாவை அணுகுவது சரியானது அல்ல.
வர்த்தகப் போர் எங்களுக்கு வேண்டாம். ஆனால், நாங்கள் அதைப் பார்த்து பயப்படவில்லை – இதுதான் வர்த்தகப் போர் குறித்த சீனாவின் நிலைப்பாடு” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.