இந்தியாவும் மெக்சிகோவும் நீண்ட காலமாக வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன… இந்நிலையில், திடீரென இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் மெக்சிகோ நாட்டு பிரதமர் கிளாடியா ஷீன்பாம்
(Claudia Sheinbaum) அறிவித்துள்ளார். மெக்சிகோவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ளாத நாடுகள் வரி விதிப்புக்கு ஆளாகும் என கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை உள்ளடக்கிய United States-Mexico-Canada Agreement என்ற முக்கியமான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டில் மறுஆய்வுக்கு வர உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ மீது எல்லைக் கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் உட்பட பல விவகாரங்களில் அழுத்தம் கொடுத்து வருகிறார். டிரம்ப்பைத் திருப்திப்படுத்தவும், வரவிருக்கும் வர்த்தக ஒப்பந்த மறுஆய்வில் அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும், இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பை மெக்சிகோ அறிவித்துள்ளது.
மெக்சிகோவுடனான வர்த்தகத்தில் இந்தியா அதிக ஏற்றுமதியையும் குறைந்த இறக்குமதியும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இறக்குமதி சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்தது. மெக்சிகோவின் அதிகப்படியான வரி விதிப்பால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்படும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதி சந்தை மெக்சிகோ.
மெக்சிகோவுக்கான மொத்த ஏற்றுமதியில், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் 33 சதவிகிதம் வரை பங்களிக்கின்றன… இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 9,000 கோடி ரூபாய். பயணிகள் வாகனங்களுக்கான இறக்குமதி வரி ஜனவரி மாதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்க உள்ளது. இந்த திடீர் வரி உயர்வால், மெக்சிகோ சந்தையில் இந்திய கார்களின் விலை மிகக் கடுமையாக அதிகரிக்கும். இந்தியாவிலிருந்து மெக்சிகோவுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன், ஹூண்டாய் , மாருதி சுசுகி மற்றும் நிசான் போன்ற பெரிய நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் .
குறிப்பாக, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை மெக்சிகோவுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. ராயல் என்பீல்ட், டிவிஎஸ், மற்றும் பஜாஜ் போன்ற இரு சக்கர வாகன நிறுவனங்களின் ஏற்றுமதியும் கணிசமாக பாதிக்கப்படும். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், மெக்சிகோ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்டோமொபைல் போலவே, இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், ரசாயனங்கள், ஜவுளி, காலணிகள், இரும்பு மற்றும் எஃகு பொருட்களும் மெக்சிகோவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவிகித வரியை குறைக்க இந்தியா போராடி வரும் நிலையில், மெக்சிகோவின் நடவடிக்கை இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
December 13, 2025 7:38 AM IST

