Last Updated:
ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்துள்ள சீனா, ஈரானுக்கு ஆதரவாக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ஃபோர்டோ பகுதியில் சாதாரண ஏவுகணைகள் ஊடுருவ முடியாத வகையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்த பங்கர் பஸ்டர் எனப்படும் அதிநவீன ஏவுகணையை வழங்கும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சீனா, அமெரிக்காவை கண்டித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் சீனா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களையும், IAEA-வின் பாதுகாப்புகளின் கீழ் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதையும் சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஐ.நா. விதி மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை கடுமையாக மீறுகின்றன. மேலும் மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகப்படுத்தியுள்ளன.
China strongly condemns the US attacks on Iran and bombing of nuclear facilities under the safeguards of the IAEA. The actions of the US seriously violate the purposes and principles of the UN Charter and international law, and have exacerbated tensions in the Middle East.
China… pic.twitter.com/tVYJmwYioi
— Lin Jian 林剑 (@SpoxCHN_LinJian) June 22, 2025
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை, குறிப்பாக இஸ்ரேலை, விரைவில் போர்நிறுத்தத்தை எட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் சீனா அழைப்பு விடுக்கிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை ஒன்றிணைத்து நீதியை நிலைநிறுத்தவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் சீனா தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
June 22, 2025 7:42 PM IST


