வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அந்த நாடு இதுவரை 1,054 அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அமெரிக்காவின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்தியதில் பூமிக்கடியில் 2,300 அடி ஆழத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யாவிடம் இதே அளவுக்கு அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 550, பிரான்ஸிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்கள் உள்ளன.
ரஷ்யாவின் ஏவுகணை: இந்த சூழலில் ரஷ்யா அண்மையில் அணு சக்தியில் செயல்படும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது உலகின் முதல் அணு சக்தி இயங்குதள ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை 14,000 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும். அணு சக்தியில் தொடர்ந்து 15 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டதாகும்.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க சீன ராணுவம் திட்டமிட்டு உள்ளது. அந்த நாட்டில் கடந்த 1990-ம் ஆண்டில் அணு ஆயுத சோதனை நிறுத்தப்பட்டது. ஆனால் சீன ராணுவம் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதள பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: இதர நாடுகளைவிட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. எனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் புதுப்பிக்கப்பட்டன. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளேன். இதன்படி அமெரிக்காவில் விரைவில் அணு ஆயுத சோதனை தொடங்கும்.
அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ரஷ்யா, 3-வது இடத்தில் சீனா உள்ளன. அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை நன்கறிவேன். அணு ஆயுத சோதனைகளை நடத்த நான் விரும்பவில்லை. ஆனால் இதர நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் சூழலில் அமெரிக்காவிலும் அணு ஆயுத சோதனை நடத்த போர் துறையை அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

