Last Updated:
டெல்லியைச் சேர்ந்த ராஜத் குப்தா என்பவர் தன்னுடைய தொழிலதிபர் கனவை பூர்த்தி செய்து வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்காக தன்னுடைய 1.5 கோடி ரூபாய் வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவருடைய இந்த தொழில் வெற்றிப் பயணம் பலருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைகிறது.
ஒரு வேலையை ராஜினாமா செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் அல்ல. நம்முடைய எதிர்காலத்தை சமாளிக்கும் வகையில் ஒரு நல்ல பேக்கப் இருக்கும் பட்சத்தில்தான் பலர் தங்களுடைய வேலையை கைவிடுகின்றனர். ஆனால், மனதிற்குள் ஒரு பிசினஸ் ஐடியாவை வைத்துக்கொண்டு பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு வேலையை விட்டுவிட்டு தொழிலை ஆரம்பிப்பது என்பது, சாதாரணமான விஷயம் கிடையாது.
இதற்கு எக்கச்சக்கமான மனித வளம் மட்டுமல்லாமல் யுக்திகளும், பகுப்பாய்வும் தேவைப்படுகிறது. ஆனால் இதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு வேலையை யாராவது விடுவார்களா என்று நீங்கள் கேட்கலாம். எனினும், டெல்லியைச் சேர்ந்த ராஜத் குப்தா என்பவர் தன்னுடைய தொழிலதிபர் கனவை பூர்த்தி செய்து வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்காக தன்னுடைய 1.5 கோடி ரூபாய் வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவருடைய இந்த தொழில் வெற்றிப் பயணம் பலருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைகிறது.
யார் இந்த ராஜத் குப்தா?
ராஜத் குப்தா என்பவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் வெளிநாட்டில் இன்ஜினியரிங் படிப்பு முடித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியில் பணிபுரிந்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்கள் அங்கு பணிபுரிந்து 1.5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால், அங்கிருந்து அவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, தன்னுடைய சொந்த தொழிலை ஆரம்பிப்பதற்காக 2023ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். ஆனால், அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பளத்தில் இருக்கும் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வர வேண்டிய காரணம் என்ன?
அமெரிக்காவில் அவர் பார்த்த ஒரு விஷயமே இந்தியாவில் இவருக்கு ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற யோசனையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ராஜத் குப்தா ஒரு விஷயத்தை கவனித்துள்ளார். அமெரிக்காவில் ஒரு மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷன் என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் இந்த அமைப்பு எளிமையானதாக இருந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அது அப்படி கிடையாது. எனவே இவர் RePill என்ற ஒரு பிளாட்ஃபார்மை உருவாக்கி அதில் மெடிக்கல் சம்பந்தப்பட்ட டெலிவரிகளை செய்வதற்கு முடிவு செய்தார்.
இந்தியா திரும்பிய பிறகு ராஜத் குப்தா தன்னுடைய இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு 12 நபர்கள் கொண்ட ஒரு குழுவுடன் ஒரு வருடத்திற்கு வேலை செய்தார். ஜனவரி 2025-இல் RePill என்ற நிறுவனத்தை அமைத்தார். மருந்து வசதிகள் சம்பந்தப்பட்ட தன்னுடைய முதல் மற்றும் புதிய தொழிலை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே ராஜத் குப்தாவின் RePill பிளாட்ஃபார்ம் மிகவும் வெற்றிகரமாக டெல்லியில் மட்டுமே 400க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றது. இதனால் இவர் தன்னுடைய திட்டத்தை நொய்டா, கூர்குவான் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார்.
RePill நிறுவனத்தை பொறுத்தவரை, நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கும் பொருட்டு மருந்துகளை டெலிவரி செய்கிறது. இது அவசர கால சூழ்நிலைகளுக்கு பயன்படும் காரணத்தால் ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரிகள் செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தை உதறிவிட்டு, இந்தியாவில் சக்சஸ்ஃபுல் தொழிலதிபரான நபர்… யார் தெரியுமா…?


