Last Updated:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு 26 சதவீத வரியை ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஏற்படலாம் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது. ட்ரம்ப் மேற்கொண்டுள்ள வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக மந்த நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உலக நாடுகள் உடனான வர்த்தக உறவுகளை மறு சீரமைக்கப் போவதாக கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், அங்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என ஜே.பி. மோர்கன் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக அங்கு வேலையின்மை 5.3 சதவீதமாக உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரிக் கொள்கையின்படி இன்று ஏப்ரல் 5 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்த பட்சம் 10 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பு நாடுகளுக்கு நாடு வேறுபடும் நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு 26 சதவீத வரியை ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்க பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது அதற்கு அதிக வரி விதிக்கப்படுவதாக கூறியுள்ள ட்ரம்ப் அரசு, அதனை சமநிலைப்படுத்துவதற்காக புதிய வரிக்கொள்கை அறிவிக்கப்படுவதாக கூறியுள்ளது.
இந்தியா உள்பட சுமார் 60 நாடுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ளது. இதனால் இந்த நாடுகள் வழக்கத்தை விடவும் கூடுதல் வரிகளை செலுத்த வேண்டும் என்பதால், பொருளாதார குளறுபடிகளை இந்த புதிய வரி விதிப்பு ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார மந்த நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஜே.பி. மோர்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
April 05, 2025 5:43 PM IST
‘அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை நடப்பு ஆண்டில் ஏற்படலாம்’ – அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்


