அமெரிக்க நிறுவனங்கள் சார்பில் கடந்த ஆண்டில் பணிநீக்க நடவடிக்கைகள் மிக அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்க நடவடிக்கைகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் 98 சதவீதம் அதிகமாகும்.
சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற அமைப்பின் சார்பில் இதுகுறித்த புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 7,21,677 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,63,832 ஆக இருந்தது.
இந்தச் சூழலில் தற்போதைய 2024ஆம் ஆண்டிலும் பணிநீக்க நடவடிக்கைகள் மிக தீவிரம் அடையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிகரித்துள்ள வட்டி விகிதம் மற்றும் நீடிக்கும் பணவீக்கம் போன்றவை காரணமாக இந்த நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலஞ்சர் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஆண்டி சேலஞ்சர் கூறுகையில், “தொழிலாளர்களுக்கான செலவினங்கள் மிக கூடுதலாக இருகின்றன. நிறுவனங்கள் தற்போது வரை மிக எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டிலும் செலவினங்களைக் குறைக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
எனவே, வேலைக்கு ஆள் எடுக்கின்ற நடவடிக்கைகள் கொஞ்சம் மெதுவாக நடக்கும் மற்றும் பணிநீக்க நடவடிக்கைகள் முதல் காலாண்டு வரையில் நீடிக்கும்’’ என்று தெரிவித்தார்.
அதிக பாதிப்பை எதிர்கொண்ட தொழில்நுட்பத் துறை:
அமெரிக்க தொழில்நுட்பத் துறையில்தான் கடந்த ஆண்டு மிக அதிகப்படியான பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, கடந்த ஆண்டு 1,68,032 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 73 சதவீதம் கூடுதலாகும்.
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம், இணைக்கப்படும் நிறுவனங்கள், வேறொரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் நிறுவனங்கள், திறமை மற்றும் பணியாளர்களை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் போன்றவை காரணமாக தொழில்நுட்பத்துறையில் அதிக நபர்கள் வேலையிழக்க வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் சில்லறை விற்பனை நிறுவனங்களிலும் கூட 78,840 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 274 சதவீதம் கூடுதல் ஆகும்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
மருத்துவத் துறையும் விதிவிலக்கு அல்ல:
பணிநீக்க நடவடிக்கைகளில் இருந்து மருத்துவ துறைகளும் தப்பவில்லை. மருந்து உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இருந்து கடந்த ஆண்டு 58,560 பேர் வேலை இழந்துள்ளனர். முந்தைய 2022ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது 91 சதவீதம் கூடுதல் ஆகும்.
சந்தையில் அதிகரிக்கும் சவால்கள் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள் போன்றவை தான் பணிநீக்க நடவடிக்கைகளுக்கான பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு ஸ்டோர்கள் மூடப்படுவது, நிறுவனங்கள் திவால் நிலைக்குச் செல்வது, ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்றவையும் ஊழியர்கள் வேலையிழப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)