Last Updated:
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடந்திருப்பதற்கு, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் நியூயார்க் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள பாப்ஸ் அமைப்பு சார்பில் நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இரண்டாவது முறை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்து கோயில்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற இழிவான செயல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டு தலங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து கோயில் தாக்குதல் சம்பவத்திற்கு நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
March 09, 2025 3:39 PM IST