நாசா (NASA) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற “Crew-12” விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், இன்று (13-02-2026) அதிகாலை 5.15 மணியளவில் (EST), புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ராக்கெட் மூலம் இந்த “டிராகன்” விண்கலம் விண்ணில் பாய்ந்துள்ளது.
இதையடுத்து, விண்கலம் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விண்வெளிப் பயணத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அறிவியல் ஆய்வு
இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், விண்கலத்தைப் பிரித்த பிறகு, பால்கன் 9 ராக்கெட்டின் முதல் அடுக்கு வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பி கேப் கனாவெரலில் உள்ள தரைதளத்தில் செங்குத்தாகத் தரையிறங்கியுள்ளது.

இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பத்திற்கு மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த விண்கலம், சுமார் 34 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பெப்ரவரி 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் (Docking) என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

