அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புதின் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா மீதான அபராத வரி நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல், இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியே இறக்குமதி வரி எனப்படும். அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தற்போது, இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படுகிறது.
ஒரு நாடு தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பொதுவாக இறக்குமதி வரியை உயர்த்தும். தனது உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வருமான அதிகரிப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து இந்த இறக்குமதி வரி வசூலிக்கப்படும். உதாரணத்திற்கு ‘X’ என்ற நிறுவனம், இந்தியாவிடம் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்கிறது என்றால், அந்த ‘X’ நிறுவனம் அமெரிக்க அரசுக்கு இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டும்.
இறக்குமதி வரி செலுத்தும் நிறுவனம், அதன் செலவை ஈடு செய்யும் வகையில், பொருள்களின் விலையை உயர்த்தி அதனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால், பொருள்களின் விலை அதிகரிக்கும்.
அதிக வரி விதிப்பதன் மூலம், தானாக பொருள்களின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்ய முடியாமல் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும் போது முதல் படியாக அதனைச் சமாளிக்க தனது ஊழியர்களின் அளவைக் குறைக்கும். அந்த வேலையை நம்பியிருந்த குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு நாட்டின் மீது அதிக வரிவிதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் அதனை அதிக விலை கொடுத்து வாங்க முன்வராமல் போக, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதே பொருள்களை குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். இதன் மூலம், போட்டி நாடுகள் தங்கள் பொருள்களை அந்த நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து லாபம் அடையும்.
பொதுவாக ஒருநாட்டின் செல்வம் அதன் ஏற்றுமதியின் மூலம் அதிகரிக்கும். எந்த நாடு அதிக ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டின் செல்வம் அதிகரிக்கும். அதே ஏற்றுமதி குறையும்போது, நாட்டின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
August 27, 2025 8:06 PM IST
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு… இந்தியாவுக்கான பாதிப்புகள் என்ன? இறக்குமதி முதல் பொருளாதாரம் வரை!

