இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி, இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி, இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. America First என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரிவிதிப்புக்கு மத்தியிலும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவிகித வரி, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிப்பதுடன் அமெரிக்காவில் நகைகளின் விலையையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கடல் உணவுகள், வாகன உதிரி பாகங்கள், மெத்தை, படுக்கை விரிப்புகள் என சுமார் 55 சதவிகித இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சில எலெக்ட்ரானிக் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய ஜவுளிகளுக்கு டிரம்ப் வரியை கடுமையாக உயர்த்திய நிலையில், அந்நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அங்குள்ள வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து கூறிய திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே பெரும்பாலான சரக்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிட்டதாக தெரிவித்தனர். வரி விதிப்பால் விலை அதிகமாகும் என்பதால் தங்களுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை சலுகை கொடுக்க அமெரிக்க வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
வரி விதிப்பினால், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும், தேசிய அளவில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நம்மை விட வரி குறைவு என்பதால் வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் ஏற்றுமதிகளுக்கு லாபமும் வாய்ப்பும் அதிகரிக்கும், என்றும் அவர்கள் கூறினர்
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 27, 2025 8:33 AM IST
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு… இன்று இரவு முதல் அமல்… திருப்பூர் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு!

