ஒரு காலத்தில் டச்சு காலணி ஆதிக்கத்தில் இருந்த கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக உள்ளது. வட அட்லாண்டில் பெருங்கடலில் உள்ள கிரீன்லாந்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கண்டங்களுக்கு இடையே உள்ளது. அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் காலத்தில், கிரீன்லாந்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. அமெரிக்காவின் மிக முக்கியமான விண்வெளி தளமான பிடூஃபி (Pituffik) இங்கு தான் அமைந்துள்ளது.
அமெரிக்க விண்வெளிப் படை மற்றும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு ஆணையம் இணைந்து இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றன. வட அமெரிக்காவை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டால் அவற்றை கண்டறிவது, பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது, துருவப் பாதையில் சுற்றும் செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொள்வது ஆகிய பணிகள் பிடூஃபி விண்வெளி தளத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கிரீன்லாந்து வெறும் பனிப்பிரதேசம் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு அது ஒரு “பாதுகாப்பு அரண்”. வட துருவப் பகுதியில் ரஷ்யா அல்லது சீனா போன்ற நாடுகள் தங்கள் ராணுவ ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றால், அதைத் தடுக்கும் நுழைவாயிலாக கிரீன்லாந்து இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாதியிலேயே கண்டறிந்து அழிக்க, பிடூஃபி தளம் மிகவும் அவசியம்.
இது மட்டுமல்லாமல், கிரீன்லாந்தில் தங்கம், யுரேனியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் அதிகளவில் உள்ளன. இவை நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்பிற்குத் தேவை. சீனா இந்தப் பகுதிகளில் முதலீடு செய்ய முயற்சிப்பதால், அதைத் தடுத்து தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்கா தீவிரமாகச் செயல்படுகிறது. 1946 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா கிரீன்லாந்தைத் தங்களுக்கே விற்றுவிடுமாறு டென்மார்க்கிடம் பேரம் பேசியது. ஆனால் டென்மார்க் அதற்கு மறுத்துவிட்டது.
இந்நிலையில், மீண்டும் கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முரண்டு பிடித்து வருகிறார். வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, மதுரோவை கைது செய்த உடனேயே அடுத்த இலக்கு கிரீன்லாந்து என டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கண்டனங்களை தெரிவித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன்
(Mette Frederiksen), டிரம்பின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த டிரம்ப், ராணுவத்தை அனுப்பிக் கூட கிரீன்லாந்தை அமெரிக்காவால் கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நேட்டோ அமைப்பில், டென்மார்க்கும் அமெரிக்காவும் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. நேட்டோ அமைப்பில் உள்ள எதாவது ஒரு நாடு தாக்குதலுக்கு ஆளானால் மற்ற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதே நேட்டோ அமைப்பின் அடிப்படை அம்சம். தற்போதைய சூழலில், அமெரிக்க மற்றொரு நேட்டோ நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், நேட்டோ என்ற அமைப்பே இல்லாமல் போகும் என கூறுகின்றன ஐரோப்பிய நாடுகள்.
அமெரிக்கா “ராணுவ நடவடிக்கை” என்பதை ஒரு மிரட்டலாகவே தற்போது வரை பயன்படுத்துகிறது. ஆனால் வெனிசுலா சம்பவத்திற்குப் பிறகு, எதையும் செய்யத் துணியும் ஒரு தலைவராக டிரம்ப் பார்க்கப்படுவதால், டென்மார்க் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய தளம்.. கிரீன்லாந்தை டார்க்கெட் செய்யும் அதிபர் டிரம்ப்.. நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!

