பாரிஸ்:
இவ்வாண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றபிறகு தமது அரசாங்கம் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
இதனால் உலக அளவில் செயல்பட்டு வரும் பல உதவி அமைப்புகள் போதிய நிதி இல்லாமல் தவித்து வருகின்றன.
போர், பஞ்சம், வறுமை உள்ளிட்டவற்றால் வாடும் மக்களுக்கு இந்த உதவி அமைப்புகள் உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்து உதவின.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் நிதி நிறுத்தத்தால் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மடியக்கூடும் என்று அண்மைய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் குழந்தையாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆய்வைப் புகழ்பெற்ற லேன்செட் ஜார்னல் (Lancet journal) நடத்தியது. அந்தத் தகவல் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கூட்டத்தில் பகிரப்பட்டது.
கூட்டத்தில் பல உலக நாட்டுத் தலைவர்களும் தொழில் முனைவர்களும் கலந்துகொண்டனர். உதவி அமைப்புகளுக்குப் போதிய நிதி உதவிகளை வழங்க இது உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அனைத்துலக மேம்பாட்டு அமைப்பு உலக அளவில் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கான நிதியில் 40 விழுக்காடு நிதியை வழங்கி வந்தது.
இலான் மஸ்க் அதிபர் டிரம்ப்பிடம் இந்த உதவிகள் செலவுகளை அதிகரிக்கிறது எனக் கருத்து தெரிவித்தார். இதனால் அனைத்துலக மேம்பாட்டு அமைப்புக்கான நிதி குறைக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பலரை அதிருப்தியில் தள்ளியுள்ளது.
எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு உதவ வடிவமைத்த உதவிக் கட்டமைப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சரியத்தொடங்கியுள்ளது. இதை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தேவைப்பட்டது, ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்காவின் நடவடிக்கையால் 14 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்: ஆய்வு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.