நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.
கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019, டிசம்பரில் போராட்டம் வெடித்தது. இதனிடையே, 2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவியதைத் தொடர்ந்து, இச்சட்டம் அமல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாத மூன்றாவது வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலானதாக இன்று(மார்ச் .11) மாலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு தில்லியில் அசம்பாவிதங்கள் ஏதும் அரங்கேறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் எந்தவித குழப்பமும் ஏற்படாமலிருக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு தில்லி காவல்துறை கூடுதல் ஆணையர் ஜோய் என்.டிர்கீ தெரிவித்துள்ளார்.