ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை 38 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. இங்கு பால்தால் மற்றும் நுன்வான் முகாம்களில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். பால்தால் வழியாக அமர்நாத் செல்ல 14 கி.மீ. யாத்திரை செல்ல வேண்டும். நுன்வான் முகாமிலிருந்து பஹல்காம் வழியாக செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்டும். இந்த இரண்டு முகாம்களில் இருந்தும் நேற்று பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டனர். ‘பும் பும் போலே’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஜம்முவின் பகவதி நகரில் 5,892 பக்தர்களுடன் சென்ற முதல் குழுவினரின் யாத்திரையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதியம் காஷ்மீர் சென்றடைந்த பக்தர்களை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்றனர். இவர்கள் அமர்நாத் குகை கோயிலில் பனிலிங்க தரிசனம் செய்வர்.அமர்நாத் யாத்திரை தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.