Last Updated:
2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி சூர்யா என்ற பெண்ணை ராம் சிங் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், கணவர், அவரின் இரண்டாவது மனைவி உட்பட 4 பேரை இரவோடு இரவாக கொன்று விட்டு, மறுநாள் கதறி அழுது நாடகம் போட்ட பெண் தனது மகன், மகளுடன் போலீசாரிடம் சிக்கியிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் கடந்த 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் மூலம் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி சூர்யா என்ற பெண்ணை ராம் சிங் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சூர்யா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சூர்யா, ராம்சிங்கின் தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகிய 4 பேர் ராம் சிங் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் காரில் நடத்திய சோதனையில், ராம் சிங்கின் இரண்டாவது மனைவி தாயார் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் எரிந்த நிலையில் கிடந்தனர். ராம்சிங் காரில் இருந்து சற்று தள்ளி கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸார் ராம் சிங் வீட்டிற்கு சென்று அவரது முதல் மனைவி சுனிதாவிடம் விசாரித்தபோது தனது கணவர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் போலீசாருக்கு சுனிதா மீது சந்தேகம் அதிகரித்தது. வீட்டை சோதித்தபோது அங்கு வீட்டு சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதையடுத்து ராம் சிங்கின் மகனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன. ராம் சிங்கின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அடிக்கடி ராம் சிங் தனது முதல் மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். தட்டிக் கேட்க வந்த முதல் மனைவியின் மகன் மற்றும் மகளையும் அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதோடு அவரது முதல் மனைவியை அனைத்து வீட்டு வேலை செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும், வீட்டை விட்டு வெளியில் செல்ல விடாமல் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராம் சிங் மீது அவரது மகனுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மகன் தெரிவித்து வந்துள்ளார். தனது தந்தையை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு கத்தியை ஆன்லைனில் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு சுனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது மகன் தனது தந்தையிடம் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இரவில் ராம் சிங் உறங்கிய பிறகு தான் வாங்கி வைத்திருந்த கத்தியை எடுத்த மகன் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் வாயைப் பொத்தி கழுத்தை கரகரவென அறுத்து கொலை செய்துள்ளார்.
இதில் சத்தம் கேட்டு எழுந்த அவரது இரண்டாவது மனைவியையும் அதேபாணியில் கொலை செய்துள்ளார். இந்த களேபரத்தில் ராம் சிங் தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகியோர் தூக்கத்திலிருந்து எழுந்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது, சுனிதாவும், தங்கையும் வந்து விட அவர்கள் உதவியுடன், ராம்சிங்கின் தாய் மற்றும் உறவினர் மகிமாவை சரமாரியாகக் குத்தி கொலையை அரங்கேற்றியுள்ளார். கொலைக்குப் பிறகு, நான்கு பேரின் உடல்களையும் இழுத்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று டீசலை ஊற்றி காருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.
தந்தையின் உடலை மட்டும் எரிக்காமல் காரிலிருந்து சற்று தள்ளி கிடத்தியிருக்கின்றனர். இதைப் பார்ப்பவர்களுக்கு தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மற்றவர்களை காருடன் தீவைத்து கொளுத்தி யாரோ கொலை செய்திருக்கின்றனர் என்பது போல் செட்டப் செய்திருக்கின்றனர். ஆனால் தடயவியல் ஆய்வில் எரிக்கப்பட்ட மூன்று உடல்களும் பின் இருக்கையில் மடங்கிய நிலையில் கிடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதன் மூலம் அவர்கள் காருக்குள் வருவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையை உணவில் விஷம் வைத்து பலமுறை கொல்ல முயன்றதாகவும் அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் கூறியிருக்கிறார். இக்கொலைகளைச் செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து அமர்ந்து தனது கணவர் இறந்ததற்காக சுனிதா நெஞ்சில் அடித்து அழுததது தான் இதில் ஹைலைட் என்கின்றனர் போலீசார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“அப்பாவை கொலை செய்வேன்..” மகனுடன் சேர்ந்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட முதல் மனைவி.. வாக்குமூலத்தில் அதிர்ச்சி!


