நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது.
மும்பையில் இருந்து பேசுவதாகக் கூறி அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் ஆன்லைன் மோசடி கும்பல், வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு வந்துள்ள பார்சலில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துவார்கள்.
அது தொடர்பாக விசாரித்து வழக்குபதிய இருப்பதாக மிரட்டி மக்களை மோசடி வலையில் விழ வைப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அழைப்பைத் துண்டித்து விட்டு, வீடியோ காலில் லைனில் வாருவார்கள்.
காவல்துறை அதிகாரி விசாரணைக்கு அமர்ந்து பேசுவதைப் போலவே போலி செட் அமைத்து மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கிறார்கள். காக்கி உடையில் பார்த்ததும் அதை உண்மை என நம்பி மக்களும் தூண்டிலில் சிக்கி விடுகிறார்கள்..
இப்படி சிங்கிள் போன் காலில் அமர்ந்த இடத்தில் இருந்தே அப்பாவி பொதுமக்களின் மீது பொய்ப் புகார்களைக் கூறி, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி லட்சகணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, கைவரிசை காட்டும் மோசடி கும்பலால் பலரும் நிம்மதியை இழந்துள்ளனர். பெரும்பாலும் அந்த மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், குறிப்பாக கம்போடியா நாட்டில் உள்ள சீனாவுக்கு சொந்தமான சூதாட்ட விடுதிகளில் இருந்துதான் அதிகளவிலான மோசடி அரங்கேற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இவர்கள் தங்களை காவல்துறை அதிகாரி, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற உயர்மட்ட இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படியுங்கள் :
தனித்து போட்டி… விஜய் போட்டியிடும் தொகுதி… தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?
ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92 ஆயிரத்து 334க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளன. மாதத்திற்கு சுமார் 214 கோடி ரூபாய் மோசடி நடப்பதன் மூலம், கடந்த 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் பிரிவு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளைப் பெற்றாலோ, உடனடியாக 1930 அவசரகால ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உடனடியாக தெரிவிப்பதன் மூலம், இழந்த பணத்தினை உடனடியாக பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்குமாறும் சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
